பைங்கிளி 12
பைங்கிளி 12
பறந்து விரிந்த நீல நிற கடல், பூமி காதலனை அலைகள் மூலம் தொட்டு தழுவி கொண்டிருந்தது. அந்தி சாயும் மாலை நேரம். அதிக ஆட்கள் நடமாட்டம் இல்லாத கடற்கரை ஓரம். மெரினா போன்ற பிசியான சுற்றுலா தளம் இல்லை. மீனவர்கள் வாழும் பகுதி. அவரவர் தங்கள் வேலைகளை பிஸியாக இருக்க, கரங்கள் பிணைந்து விரல் கோர்த்து, அலைகள் தொட்டு தழுவும் கடற்கரை மண்ணில் நடந்து கொண்டிருந்தனர் மிதுனும் யாழினியும்.
என்ன தான் கட்டுப்பாடுடன் படிப்பிலும் வேலையிலும் கவனம் செலுத்தினாலும் அவ்வ போது இருவரும் இப்படி சந்தித்து நேரத்தை செலவிடுவார்கள். திருமணம் முடிந்ததே என்று தடையின்றி கொஞ்சி குழாவி கொள்ள மாட்டார்கள். அணைப்பு கூட இல்லை. விரல் கோர்த்து நடப்பார்கள், இனிக்க இனிக்க காதல் கதை பேசுவார்கள் அதை தாண்டி எதுவும் நடந்தில்லை இருவரும்.
இன்றும் அப்படி நேரம் செலவிட, சற்று தூரத்தில் அவர்களை பார்த்த படி அமர்ந்திருந்தாள் யாழினி. அவளை பார்த்த படி, அவள் அருகிலே அமர்ந்திருந்தான் வசிகர். கோலி குண்டு கண்கள் உருட்டி கடலை பார்த்து மகிழும் பூவையை தன் விழிகளில் நிரப்பி கொண்டான்.
மதியம் வசிக்கு போன் செய்த யாழினி "அண்ணா.. இன்னைக்கு மிதுன பாக்க போறேன்.. அவரே என்ன வீட்டுல ட்ராப் பண்ணிருவாரு" என்றாள்.
"ம்ம்.. சரி.." என்றவன் என்ன நினைத்தனோ "நீ தனியாவா போற?" ஏதோ ஆர்வத்தில் கேட்க, "இல்ல ண்ணா.. ஆர்யா என்கூட வர்றா.. நானும் அவளும் தான் தான் போறேன்.. சரி டைம் ஆச்சு நான் கிளம்புறேன்.." என்று இணைப்பை துண்டிக்க, வசி மனதில் ஏதோ கணக்கு போட்டான்.
மிதுன் யாழினி இருவரும் தனித்து இருக்கும் போது ஆர்யா தனியாக இருப்பாள். நான் அவளுடன் இணைந்து கொள்ளலாம்.. என்று நினைத்தவன் "மாமா..." என்று ஓடினான் மிதுனிடம்.
அறக்க பறக்க வந்தவனை பார்த்த மிதுன் "என்ன வசி? ஏன் எப்டி வர்ற?" புருவம் சுருக்கி கேட்க, "நீ யாழினிய பாக்க போரேல்ல..? நானும் வர்றேன்??" என்றான்.
அவனை முறைத்த மிதுன் "டேய்.. நானே எப்பவாச்சும் தான் டா அவகூட இருக்கேன். என்ன தான் போன்ல பேசுனாலும் நேர்ல நாங்க பேசிக்கிறது மாசத்துல ஒரு தடவ தான். அதுவும் சில நேரத்துல இல்ல. இதுல நீ வேற ஏன் வசி குறுக்க வர்ற?" பாவமாக கேட்டான் மிதுன்
"நான் ஏன் உங்கள தொந்தரவு பண்ண போறேன். புருசன் பொண்டாட்டிக்கு நடுவுல வர்ற பாவம் எனக்கு வேண்டாம்.. நான் அப்டியே ஒரு ஓரமா உக்காந்துக்குவேன்.." பவ்வியமாக கூறியவனை ஏற இறங்க பார்த்த மிதுன் "சரி இல்லையே இவன்..." சந்தேகமாய் பார்த்த படி "போலாம்.." என்று பைக் எடுக்க, "கார்ல போலாம் வா மாமா.." என்று காரில் அவனை ஏற்றி கொண்டு பறந்தான்.
அவர்கள் இருவரும் மெல்ல நடந்து கொண்டு காதல் கதைக்க, இவனோ கண்களாலே காதல் கதைத்து கொண்டிருந்தான். கடலை பார்த்து கொண்டிருந்த ஆர்யா அவன் பக்கம் திரும்ப திடுக்கிட்டு அதிர்ந்தான் வசி. தன் அதிர்ச்சியை காட்டி கொள்ளாமல் "ஏதாச்சும் சாப்பிடலாம்.." என்றான்.
ஆனால் சுற்றி கடைகள் எதுவும் இல்லை. சுற்றி பார்த்தவள் "ஆங்.. இங்க சாப்ட எதுவும் கிடைக்காதுன்னு நினைக்கிறேன்.." என்று அவள் முடிக்கும் முன் ஐஸ்கிரீம் வண்டி சற்று தூரத்தில் வந்து நிற்க அது போதுமே அவனுக்கு "ஐஸ்கிரீம் சாப்பிடலாம் வா.." அவள் கரம் பற்றி இழுத்து சென்றான்.
"பட்டர் ஸ்காட்ச்.. "என்று அவள் கேட்க அவனும் வாங்கி கொடுத்தான். ஐஸ்கிரீம் உண்ட படியே தூரத்தில் இருந்த இருவரையும் பார்த்து "இவங்க இப்ப முடிக்க மாட்டாங்க போல இருக்கே.." சலிப்பாக கூறினாள்.
வசி மென்மையாய் சிரிக்க, "அப்டி என்ன தான் பேசுவாங்க??" முகம் சுருக்கி அவள் கேட்க விதத்தில் "அப்சரா.. எவ்ளோ அழகா இருக்கா.." மனதிற்குள் நினைத்து கொண்டான்.
"லவ் பண்றவங்களுக்கு பேச நிறைய இருக்கும்.." என்று நிறுத்தி "நீயும் லவ் பண்ணி பாரு.. பேச நிறைய இருக்கும்.." கடைக்கண்னோரம் அவளை பார்த்து கொண்டே கூற, "நான் லவ் பண்றேன்.." என்றாள்.
தூக்கி வாறி போட்டது அவனுக்கு. லவ்வா? என் பைங்கிளி என்னைவிட்டு வேற ஒருத்தன விரும்புறாளா?? அதிர்ச்சியாய் அவளை பார்க்க "என் அப்பாவ நான் ரொம்ப லவ் பண்றேன்.. மை பஸ்ட் லவ்.." நெகிழ்ச்சியாக கூறினாள்.
அதிர்ச்சி கலைந்து புருவம் சுருக்கி அவன் பார்க்க தன் தங்கை தங்கள் தந்தை மீது எத்தனை பாசம் கொண்டிருக்கிறாள் என்று அவனும் அறிவான். பெண் பிள்ளைகளுக்கு மட்டும் தந்தை மீது ஏன் இத்தனை பாசமோ? என்று யோசித்தவனுக்கு தன் வாழ்வில் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னை தூக்கி ஏரியாத ஒரே ஆண் தன் தந்தை என்று அவன் புரிந்து கொள்ளும் நாள் வார போகிறது என்று அப்போது அவன் அறிந்திருக்க மாட்டான்.
"வசி ஏன் அறக்க பறக்க ஓடி வந்தான்.." மிதுன் கேட்க, "ஏன்?" பதிலுக்கு அவளும் கேட்டாள்.
"உங்கள பாக்க வர்றேன்னு சொன்னேன்.. வேற ஒன்னும் நான் சொல்லலையே.."
"நானும் உன்ன பாக்க கிளம்பும் போது தான் அவன் வந்தான். கார்ல போலாம்ன்னு சொன்னான்.." என்று வசியை பற்றி கூற புருவம் முடிச்சுடன் யோசித்தாள் யாழினி.
தூரத்தில் ஐஸ்கிரீம் உண்டு கொண்டு நின்ற இருவரையும் பார்த்து அண்ணன் எண்ணத்தை புரிந்து கொண்டவள் மிதுனிடம் எதுவும் சொல்லவில்லை. அரை மணி நேரம் கழித்து நால்வரும் புறப்படும் போது "அண்ணா.. உங்களுக்கு.." என்று ஒரு கிப்ட் கொடுத்தாள் ஆர்யா..
"எனக்கா??" புருவம் சுருக்கி பார்த்த மிதுன் அதை வாங்கி கொள்ள, "இன்னைக்கு உங்க பார்த்டே ல.." காலை யாழினி கூறியதை வைத்து அவனுக்கு பரிசு வாங்கி வந்திருக்க மகிழ்வுடன் பெற்று கொண்டாம். அதோடு ஆர்யாவின் அண்ணா.. அண்ணா.. என்ற அழைப்பில் குழைந்து உருகி போனான் மிதுன். யாருமே இல்லாத அவனுக்கு எல்லாமுமாக யாழினி இருந்தாலும் குட்டி தங்கையாக கிடைத்த ஆர்யா அழைப்பில் உருகினான்.
யாழினி பின் இருக்கையில் அமர்ந்திருக்க முன் இருக்கையில் அமர வந்த மிதுனிடம் "நீ யாழினி கூட உக்காரு மாமா.." என்றான்.
மிதுனுக்கும் புரியாமல் மனைவி அருகில் சென்று அமர்ந்து கொள்ள, யாழினி அவனை முறைத்தாள். கணவன் மனைவிக்கு இடையில் தான் ஏன் வார வேண்டும் என்று ஆர்யா முன் பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டாள். இரு ஜோடிகளும் ஆர்யா வீடு நோக்கி சென்றனர்.
நால்வரும் வர அவர்களை வரவேற்றார் ஸ்ரீனிவாசன். அவரை கண்டு ஆர்யா தவிர மற்ற மூவரும் திட்டுகிட்டனர். பணக்கார பட்டியல் வரிசையில் உள்ள பேரும் புகழும் பெற்ற பிஸ்னஸ் மென் மாற்றன் அணிந்து சமைத்து கொண்டிருந்தார். எள் என்றால் எண்ணையாக நிற்க வேலையாட்கள் வரிசையில் நிற்க, இவரே சமைக்கிறாரே.. என்று மூவரும் பார்த்தனர்.
தன் மகளுக்காக அவர் சமைக்கிறார். இன்று நேற்று அல்ல தன் மனைவி இறந்ததில் இருந்தே மகளை பார்க்க செல்லும் போதெல்லாம் அவர் தான் சமைப்பார். நால்வரையும் அமர்த்தி உணவு பரிமாற கல கலத்து கொண்டு உண்டனர். பேசி கொண்டே உண்டதால் ஆர்யாவுக்கு புரையேற அவள் தலையில் தட்டி தண்ணீர் குடிக்க வைத்தான் மிதுன். அவள் முதுகு வருடி "ஓகே வா டா ம்மா.." வஞ்சனையாய் அவன் கேட்க "ஒன்னும் இல்ல.." என்றாள்.
உண்டு முடிந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர். மிதுன் அவன் பள்ளியில் இறங்கி கொள்ள, வீடு நோக்கி சென்ற யாழினி தமயணை முறைத்து தள்ளினாள்.
"இப்போ எதுக்கு இப்டி பாக்குற?" சாலையை பார்த்தவன் அவள் புறம் திரும்பி கேட்க, "நீ ஏதோ ஆர்யாவ சைட் அடிக்கிறேன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா நீ பண்றதெல்லாம் பாக்கும் போது.." சந்தேகமாக அவள் இழுக்க, "நீ சந்தேகமே படவேண்டாம் யாழினி.. நான் ஆர்யாவ லவ் பண்றேன்.." மனம் நிறைந்த அன்புடன் அவன் கூற யாழினிக்கும் எல்லை இல்லா மகிழ்ச்சி.
உயிர் தோழியே அண்ணனின் மனைவியாக வர கசக்குமா என்ன? மனதிற்குள் மகிழ்ச்சி இருந்தாலும் "நீ தான் முரட்டு சிங்கிள் ஆச்சே.. சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காதுன்னு பீத்திக்கிவியே.." புருவம் இடுங்க கேட்டாள்.
"என்ன பண்றது நானும் என் மனச எந்த பொண்ணாளையும் இழுக்க முடியாதுன்னு நினைச்சேன்.. ஆனா இவ இழுட்டாளே.." நெஞ்சை நீவி கொண்டான்.
"நீ இப்டி மாறுவேன்னு நான் நினைக்கவே இல்ல அண்ணா..
"நானே நினைக்கலே யாழினி.. மாமனுக்கு ஏத்த மச்சினி அவ தான்.." தார் சாலையில் கார் ஓட்டி கொண்டு சென்றவனுக்கு புஷ்பக விமானத்தில் வானத்தில் பறப்பது போல இருந்தது. இமை திறந்து கொண்டே கனவு கண்டான்.
தமயணை விசித்திரமாக பார்த்தாள் யாழினி. "இவன் இப்படியெல்லாம் பேச மாட்டேனே.. இந்த ஆர்யா பொண்ணு என் அண்ணன வசியம் பண்ணிட்டா.." வஞ்ச புகழ்ச்சியாக நினைத்து புன்னகையித்தாள்.
மறுநாள் கல்லூரி வந்த ஆரியா யாழினியிடம் "தப்பா எடுத்துக்காத யாழினி.." தயக்கமாக கூற, புரியாமல் புருவம் சுருக்கிய யாழினி "என்ன தப்பா எடுத்துக்காத?" என்று கேட்டாள்.
"இல்ல.. நேத்து எனக்கு புரையேறினப்ப அண்ணன் எனக்கு தலைல தட்டி தண்ணீர் கொடுத்தாங்க.." இழுவையாக தயக்கதோடு கூற குபீர் என சிரித்தாள் யாழினி. அவள் சிரிப்பின் காரணம் புரியாமல் ஆர்யா பார்க்க, அவள் தோளில் கை போட்டு "என் புருஷனையும் என்னையும் என்னன்னு நினைச்ச? அவர் எப்படின்னு எனக்கு தெரியும். அதோட, நீ அண்ணன்னு சொன்ன ஒரு வார்த்தைல அவர் உன்ன தங்கச்சியா நினைக்க ஆரம்பிச்சுட்டார்.. யாரும் இல்லாத அவர அண்ணான்னு சொன்னியே அது போது அவருக்கு.." தன் கணவன் பற்றி கூற மகிழ்ந்தாள் ஆர்யா..
நாட்கள் இப்படியே சென்றது. தன் காதலை மனதிற்குள் வைத்து பொத்தி பொத்தி வளர்த்தான் வசி. தினமும் அவளை பார்க்கவே யாழினியை ட்ராப் செய்வது போல காலேஜ் சென்றான்.
இது இப்படியே தொட, தன் காதலை அவளிடம் சொல்லிவிட நினைத்து அன்று ஆர்யாவை காண அவள் கல்லூரிக்கு வந்தான். கல்லூரி முடித்து வீடு செல்ல போனவள் வசியை பார்த்து "யாழினி இன்னைக்கு காலேஜ் வரல.." என்றாள்.
"ஆங்.. நான் உன்ன பாக்க தான் வந்தேன்.."
"என்ன பாக்கவா? என்ன விஷயம்?"
"இங்க பேச வேண்டாம்.. காபி ஷாப் போலாம்??"
இப்படியெல்லாம் என்னிடம் பேச மாட்டானே?? யோசனையாய் அவனுடன் சென்றாள். பயம் இல்லை, தயக்கம் இல்லை, தெளிவாக இருந்தவன் அவள் முகத்தை பார்த்து "நான் உன்ன லவ் பண்றேன் ஆர்யா.." என்றான் தெளிவான முகத்தோடு.
அதிர்ந்து போனாள் ஆர்யா.. தன் தோழியின் அண்ணன். தன்னிடம் காதலை சொல்கிறானே என்று. என்ன சொல்வதென்று தெரியாமல் முதல் முறையாக தடுமாறினாள் ஆர்யா. இது போன்ற காதல் அம்புகள் அவளுக்கு புதிது இல்லை. காதலிக்கிறேன் என்று வருபவர்களிடம் பக்குவமாக கூறி விலகிவிடுவாள். ஆனால் இவனிடம் விலக முடியவில்லையே.. தடுமாறுகிறேனே.. அவளுக்கே புரியவில்லை.
தொண்டை குருதேலும்பு ஏறி இறங்க, கை விரல்கள் பத்தையும் கோர்த்து முறுக்கி, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தவளை பார்த்த வசி "பிரண்டோட அண்ணன் எனக்கு அண்ணன்னு நினைச்சியா ஆர்யா?" தலை சாய்த்து கேட்க, அவனை பார்த்தவள் இட வலமாக இல்லை என தலையாட்டினாள்.
வேற என்ன? அவன் கேட்க, "நான் உங்கள லவ் பண்ணல.. எனக்கு உங்கமேல அப்டி ஒரு உணர்வு வரல.. ஐ அம் சாரி.." வார்த்தைகள் ஒவ்வொன்றும் உச்சரிக்க உச்சரிக்க மனம் ரணமாய் வலித்த உணர்வை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவள் பதில் தெரிந்தும் அவனிடம் பெரிதாய் மாற்றமில்லை.
"எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் ஆர்யா. முதல் முறையா உன்ன பார்த்தப்பவே எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சு போச்சு.. அது காதல்ன்னு எனக்கு அப்போ தோணல. நாள் ஆக ஆக காதல்ன்னு தோணுச்சு.. உன்மேல வந்த உணர்வ உன்கிட்ட சொல்லிறலாம்னு நினைச்சேன்.. சொல்லிட்டேன்.. உன் முடிவு. உன்ன போர்ஸ் பண்ண மாட்டேன்.." என்று நிறுத்தியவன் "அப்படியெல்லாம் சொல்ல ஆசை தான். ஆனா என்னால உன்ன விட முடியாது ஆர்யா. அவ்ளோ விரும்புறேன் உன்ன." என்றவன் அதற்கு மேல் பேசவில்லை எழுந்து சென்றான்.
உறைந்து போயிருந்தாள் ஆர்யா. என்ன பதில் சொல்வது பேசுவது என்று தெரியவில்லை அவளுக்கு. மனதில் எதையோ யோசித்து கொண்டு அப்படியே அமர்ந்திருந்தவளை வெயிட்ர் உசுப்ப, சிந்தை தெளிந்தாள். தன் புத்தக பை எடுத்து கொண்டு வீடு நோக்கி சென்றாள்.
அனைத்தையும் தன் தந்தையிடம் பகிர்ந்து கொள்பவள் வசி தன் காதலை கூறியதை அவரிடம் கூறவில்லை. யாழினியிடமும் கூறவில்லை. நாட்கள் செல்ல, யாழினி , ஆர்யா இருவரும் அந்த ஆண்டு படிப்பை முடித்து அடுத்த வருட படிப்பை தொடர்ந்தனர்.
அன்றும் மிதுன் யாழினி கரம் கோர்த்து காதல் கதைத்து கொண்டு நடந்து கொண்டிருக்க, வசி தனியாக அமர்ந்து போன் பார்த்த்து கொண்டிருந்தான். அன்றைய நாளுக்கு பிறகு அவன் ஆர்யாவிடம் பேசுவதில்லை. ஆனால் அழுத்தமான ஒரு பார்வை பார்ப்பான். அந்த பார்வை அவள் மனதை ஊடுருவிருவி சென்றது. தன் காதலை அவன் சொல்லும் முன் பார்த்த பார்வைக்கும், இப்போது அவன் பார்க்கும் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.
காதலிக்கவில்லை என்று விட்டாள். ஆனாலும் அவளால் முன் போல அவனிடம் பேச முடியவில்லை. காதல் வேண்டாம் நண்பர்களாக இருக்கலாம் என்று இன்று வரை நண்பர்களாக இருக்கும் ஆடவர்களுக்கு நடுவில் இயல்பாக இருந்தவளுக்கு இவனிடம் இயல்பாக இருக்க முடியவில்லை.
என்னை விரும்பு, மணந்து கொள் என்று அவன் வற்புறுத்தியிருந்தால் கூட அவன் மீது வெறுப்பு வந்திருக்கும். ஆனால் இவனோ
என்னல உன்ன விட முடியாது ஆர்யா.. அவ்ளோ விரும்புறேன் உன்ன என்றான். ஆனால் அதன் பின் அவளிடம் நெருக்கம் காட்டவில்லை. அதனாலே அவனையே நினைத்து கொண்டிருந்தாள்.
அடுப்பில் பால் வைத்தவள் வசியை பற்றி நினைத்து கொண்டியிருக்க, பால் பொங்கி வழிந்தது. நுரை கருகும் வாசனையில் அவன் நினைவில் இருந்து தெளிந்தவள், பொங்கும் பாலை கண்டு அதிர்ந்து சற்றும் யோசிக்காமல் வெறும் கைகளால் பால் பாத்திரத்தை தூக்க, பழுக்க காய்ந்து போயிருந்த சூடானா பாத்திரம் அவள் பிஞ்சு உள்ளங்கையை பதம் பார்த்தது.
"அம்மா.." என்று அலறியவள் கையில் இருந்து பால் பாத்திரம் தவறி அவள் காலில் விழுந்து சந்தன நிற கால்களையும் பொசுக்கியது.
அவள் குரல் கேட்டு வேலையாட்கள் ஓடிவந்து அவளை மருத்துவமனையில் சேர்க்க, பதறி துடித்து ஓடி வந்தார் ஸ்ரீனிவாசன். இரு உள்ளங்கையும் வெந்து மருந்து போட பட்டு, இடது காலிலும் கொப்பளித்து கொப்புலங்கள் நீர்கட்டி நிற்க துடித்து விட்டார்.
"எனக்கு ஒன்னும் இல்ல ப்பா.. சிறு புன்னகையுடன் அவள் கூறினாலும், தந்தை மனம் கலங்கியது. இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்க மகளுக்கு துணையாக அவளுடனே தங்கி கொண்டார் ஸ்ரீனிவாசன்.
வீடு வந்த பின் தன் போனை சார்ஜ் போட்டு ஆண் செய்து பார்க்க, யாழினியிடமிருந்து நிறைய அழைப்பு வந்திருந்தது. அவளுக்கு அழைத்து விஷயத்தை கூற பதறி அடித்து கொண்டு ஓடி வந்தாள். அவள் மட்டும் அல்ல அவனும் தான்...
கருத்துகள்
கருத்துரையிடுக